சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து வெளியேறுகிறது தஜிகிஸ்தான்


நெதர்லாந்தின் ஹேக் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து (ICC) விலகுவதற்கான அதிகாரபூர்வ நடவடிக்கையைத் தஜிகிஸ்தான் தொடங்கியுள்ளது.

இதன் மூலம், அமெரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக இராஜதந்திர அழுத்தங்களை முன்னெடுத்துவரும் சூழலில், அந்த நீதிமன்றத்திலிருந்து விலகும் நடவடிக்கையைத் தொடங்கிய நான்காவது நாடாகத் தஜிகிஸ்தான் மாறியுள்ளது. சாட், வெனிசுலா மற்றும் நௌரு (Naoero) ஆகிய நாடுகளும் இதற்கு முன்னர் விலகல் நடவடிக்கைகளை அறிவித்திருந்தன. 

தஜிகிஸ்தானின் இந்த முடிவு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்தரவுடன் தொடர்புடையதாகப் பார்க்கப்படுகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின்போது உக்ரைனியக் குழந்தைகளைச் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், 2023 மார்ச் மாதம் புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவைப் பிறப்பித்தது.

2025ஆம் ஆண்டு புதின் தஜிகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டபோது அவரைக் கைது செய்யத் தவறியதாக அந்நாட்டைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பின்னர் விமர்சித்திருந்தது. 

தஜிகிஸ்தான் அரசாங்கம், 2026 நவம்பர் 20ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரிடம் ரோம் சட்டத்திலிருந்து விலகுவதற்கான அறிவித்தலைச் சமர்ப்பித்துள்ளது.

இதன்படி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நிறுவிய ரோம் சட்டத்தின் 127ஆவது பிரிவின்படி, இந்த விலகல் 2027 நவம்பர் 20ஆம் திகதி நடைமுறைக்கு வரும். அதுவரை தஜிகிஸ்தான் அந்தச் சட்டத்தின் உறுப்பு நாடாகவே இருக்கும். 

இந்த நடவடிக்கை குறித்து வருத்தம் தெரிவித்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகள் சபையின் தலைமைப் பொறுப்பாளர்கள், இது சர்வதேச நீதிக்கான கூட்டு முயற்சியையும், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிப்பதைத் தடுக்கும் உலகளாவிய முயற்சிகளையும் பலவீனப்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளனர். 

இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியமும் தஜிகிஸ்தானின் முடிவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. சர்வதேச நீதித்துறையின் சுதந்திரத்தையும், போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது. 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் செயல்பாடுகளை முடக்குவதற்கான இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த விலகல் அறிவிப்பு சர்வதேச அரசியல் அரங்கில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

No comments